Sunday, June 25, 2023

கண்ணீர் உனதாகுக

 உணர்வுகளற்ற ஒரு தனியறை ,

யார் யாரோ படித்த 

பழைய கவிதை புத்தகம் ,

ஒவ்வொரு வார்த்தையிலும் 

கண்ணீர் வாசம் ,

பிரபஞ்சம் முழுதும் அண்டி இருக்கும் 

காரிருள் போல 

படர் பேருவுவகை 

— ஷ்ரவன்


Thursday, February 23, 2023

ஒரு கால் தூக்கி

என் கால் மண்ணில் படும் என்றோ 
என்னுயிர் பிரியும் அன்றே. 

பிரபஞ்ச பெருங்கூத்து 
அதில் நகையாடா கோமாளிகள் ஆயிரமன்றோ.. 

கூத்தாட யாரூமில்ல 
ஐயோ!!! இங்க கூத்த பார்த்தவனும் உண்டோ.. 

கால் தூக்கி நின்னையப்பா 
என் காலும் மண்ணில் பட வேணுமப்பா.. 

 -ஷர்வன்

Sunday, April 3, 2022

மெய் உணர்வு

என் உயிர் உற்றேகும் உடலே... உன்னாலே உயிர் உணர்வேனே...  --ஷர்வன்

Tuesday, October 12, 2021

கனவு தானே !!

கனவு தான் இதுவும்
விழித்திடு மனமே
 
அறியாமை உழன்று
அறிதலில் உவகை உணர்ந்தனயோ 
கனவு தான் இதுவும் 
விழித்திடு மனமே
 
உவகையுணர உழன்றாக வேண்டுமோ 
இரு நிலையின்றி 
ஒரு உயிர் என்று 
துறவை துணியத் தான் வேண்டுமோ 
 
கனவு தான் இதுவும் 
துணிந்திடு மனமே 
விழித்திடு 
 
--ஷர்வன்

Thursday, February 20, 2020

வாழ்வுடைத்தகைமை

தனியுடைமை பொதுவுடைமை 
பேசும் அறிவாளிகளுள்
உடைமை கொள்தலின் தீமைகள் 
உரைப்பவன் நான்


மெய்யுண்டு உணர்உண்டென்றால், 
உயிராமோ? 
உயிர்த்திருத்தலுண்டு உயிரிலில்லையென்றால்
பொய்யாமோ? 

உன் சிந்தணையை 
நீ பார்த்த நொடியில் 
பிறந்ததன்றொ மாயை

அதை நீயென்று சொன்னால்
நீ மறைந்தொளிந்து போவாயோ? 

இல்லை பேயென்று பெயரிட்டால்
மாயையும் 
மறைந்தொழிந்து போய்விடுமோ? 

அறிவே மாயை
சிந்தனையே அதற்கு சோரு
மாயை வளர சோரு விழையும் சேற்றில் 
 புழுவாய் நெளியுதம்மா வாழ்க்கை

அவ்வாழ்க்கையில் உடைமை கொள்தலின்
தீமைகள் சொல்வேன் கேளாயோ

-ஷ்ரவன்

Friday, July 6, 2018

ஹெத்தையம்மன் கெடாலஜி


ஆணி வேர் வரைக்கும் காய்ச்சுப்போச்சு
மனுஷன் மனசுலயும் ஈரம் பாய
மாரி பெய்யவேணுமம்மா

விண்ணுயர நின்ன
மரமும் மானமும்
பொதராதான் நிக்குதம்மா

ஆடு மாடு போல
நாங்களும் இல பறிச்சு தின்னுதா
வாழணுமா ?

-ஷ்ரவன்

Monday, April 30, 2018

ஓரிரவு

மெய் அறிவென்து யாதெனில்
தன் மெய் உணர்வதேயென்று
உரக்கச் சொல்லியது
நேற்றிரவு.

- ஷர்வன்

Monday, April 2, 2018

கருங்கடலாகி

முழு மதி கண்ட
கடல் பேசிட
அலை அன்றி
வேறு மொழியேதடி

அங்குலம் அலகாய் கரையேரி வந்து
வானில்  உன்னை காணும்
நாளும் வருமோ?

கவிதையில் உவமையில்
கைக்கிளயாய் கிடவோமா?

திரவத்தில் ஒளி கலந்து
நுரையாய் தவழுதடி
நம் காதல்...

சேர்ந்து மகிழ்தல் அல்ல
உணர்விலயத்தல் காதலென்று
சந்தம் சொல்லுதடி என் மொழி.... அலை மொழி...


-ஷர்வன்

Thursday, November 2, 2017

ஒரு உருவம் உண்டு என்னிடம்

அனைத்து வார்த்தைகளுக்கும்
ஒரு உருவம் உண்டு என்னிடம் ...

அணுப்பிளவிற்கும் அது தரும்
சக்திக்கும் ,

கடவுளுக்கும் காதலுக்கும் அது தரும்
இன்பத்திற்கும் ,

நோய்க்கும் துன்பத்திற்கும் ,
உயிர்க்கும் ஆதரவற்ற கண்ணீருக்கும் உண்டு ,

அருவத்திற்கும் , முடிவிலிக்கும் கூட
அறுதியாய் இறுதியாய்
ஒரு உருவம் உண்டு .

அறியாதது ஏதுவானாலும்
உருவம் புனைந்து
இலக்கணம் வகுத்து
பெருமிதமாய் நிற்குது அறிவு ...

பாலையில் வாழ்வில்லை என்று
கழுகின் கால் பற்றிச் செல்லுது
மீனோன்று ..

சொன்னேனே
அனைத்து வார்த்தைகளுக்கும்
ஒரு உருவம் உண்டு என்னிடம் ...

-ஷ்ரவன் 





Saturday, August 5, 2017

வாழ்கை

கண்ணாடிக் கூண்டுக்குள்
எங்கும் என் அறிவின்
பிரதிபலிப்பு

அத்வைதமாய்
நீக்கமற நிறைந்திருக்கும்
ஒருவித கடுப்பு

-ஷர்வன்

யாதுமானவளே

மேகம் சிறை பிடிக்கும்
மாமலையென நிற்கிறாள்.

கட்டித் தழுவி
கண்ணீராய், அவள்
காலடியில் கரைகயில்
கால சுழற்சியில்
என்னை
மறுசுழற்சி செய்கிறாள்.

எப்பாதை சென்றாலும்
எக்கடல் சேர்ந்தாலும்
மீண்டும் உன்னை
கட்டித் தழுவிடும்
வரம் வேணுமடி...

-ஷர்வன்

Thursday, May 25, 2017

விடுதலை


சந்தம் தேவையில்லா சத்தமடி 
வழியில்லா வான்வெளியெங்கும்  பரவுதடி 

என் மனமும்  அதுபோல 
வாழ்ந்திடத்தான் ஏங்குதடி நித்தமும் ...

-ஷ்ரவன் 

Sunday, February 19, 2017

சக்தி சரணம்

ஓம் எனும் ஒலியில் தெடங்கியதாய் ஓர் கூற்று ,
ஒன்றுமிலா வெளியதனில்
ஒளியில் தொடங்கியதாய் ஒரு தேற்றம்,

ஒலி அழகின் உச்சம் 
அகரத் தமிழென்று 
அறிந்தேனே,

ஒளி அலகின் உச்சம்
அவள் வடிவென்று உணர்ந்தேனே ,

ஒலியும்  ஒளியும் 
அறிந்ததும்  உணர்ந்ததும்
யாவும் அன்னை சக்தியென
தெளிந்தபின்
என் சித்தம் சிவனாகிட கண்டேனே

- ஷர்வன்

Thursday, September 15, 2016

பிள்ளையார் காதல்


இன்னும் படபடக்கும் இதயம் அடங்கவில்லை ,
கண்கள் இன்னும் தெளியவில்லை ,
வியர்வையினூடே கிசுகிசுத்தாள்

வழிப்பசிக்கு முத்தங்கள்
கட்டித் தருகிறேன்
போய் உலகம் வென்றுவாவென்றாள்.

என் உலகமே நீதான்
வென்று சில நிமிடங்கள் ஆகிறது,
களிப்பில் இளைப்பாறுகிறேன்.

அந்தக்  கண்களில் மொழிபெயர்பு ...
இனி பழம் கிடைக்கப்போவதில்லை

-ஷ்ரவன்

Friday, September 9, 2016

அவ்வண்ணமே அமையட்டும் அம்மணம்

விரச எல்லை தாண்டிவிட்ட விரகம் ,
நாகரீக எல்லை தாண்டிவிட்ட அசிங்கமான கோபம் ...
....
....
....

உடைமட்டுமல்ல
ரசனையும் சுமைதான்,

சிகரத்தின் அடிவாரத்தில்
கழற்றிவிட்ட ரசனை
புள்ளியாய் தெரிகிறது.
உயிர் காக்க தேவையொன்றுமில்லை
உயிர் மட்டும் பிடித்துக்கொண்டு
உச்சி தொட்டுவிட தவழும்
மலையேறியின்
வெறிதான் எனக்கும்.

கொடுக்க காதலும் முத்தமும்
தீர்ந்தாயிற்று,
துரோகிக்கு தரும்
கற்பனைத் தண்டனைகள் மட்டுமே
மீதியிருக்கிறது.

சத்தமும் ரத்தமும்
போர் வண்ணமாய் ...

விசும்பல் சத்தம்
வெற்றியின் பாதையில்
போர் செல்லுவதை தெரிவிக்கிறது.

உன் விசும்பல் எனக்கும்
என் வெறி உனக்கும்
அவரவர் வெற்றிகள்.

வலுவின்மை தரும்
இயலாமை,
அம்மண நிலையிலும்
அவமானம்.

என் மானத்தை
கோட்டுமேட்டிலோ? காலிடிக்கிலோ?
புதைத்தாலோ 

கொஞ்சலில் ஆரம்பமாகி,
மண்டியிட்டு கெஞ்சும் என் சொல்லிலோ,

காக்கவிட்டு , தவிக்கவிட்டு
ஏறு கணத்தில் ,சீறு சினதிற்கு
பிச்சையாய் நீ தரும்
புன்னகை தருணத்திலோ

உன் பழிவெறி தீருமாயின்
அவ்வண்ணமே அமையட்டும் நம் அம்மணக் கோலம்.

-ஷ்ரவன்

பார்த்ததும் தெளிந்ததும்

முந்தானை நழுவாதிருக்க ஒரு ஊசி ,
இடுப்பு தெரியாதிருக்க ஒரு ஊசி ,
மறைக்க வேண்டுமானால்
உன் முகத்தையெல்லவா
மறைத்திருக்க வேண்டும்.

கூரில்லா முட்டாளா இவள்.

வெட்கத் தருணங்களில் 
முகம் மறைத்துக் கொள்ளும்போது
தெளிகிறது

எல்லாம் தெறிந்தேதான் செய்திருக்கிறாள்
சூச்சமக்காரி..

-ஷ்ரவன்

Wednesday, August 31, 2016

எச்சரிக்கை

ஒவ்வொரு வாசிப்பும்
ஒரு கண் திறந்து வைக்கிறது.

அந்தச் சல்லடைக்கண் ,
தீது நன்று பிரிப்பதற்காவதில்லை 
தேர்வன தேர்ந்தெடுக்க.

சில புத்தகங்கள்
கண் திறப்பதில்லை
பெரிய ஓட்டை போட்டுச் செல்கிறது.
அவற்றை அவ்வாறே
உள்வாங்கிட தன்மை செய்கிறது.

பக்கவிளைவு
சுயமிழத்தல்!!!!
அல்லது
சுயம் தங்கள் ஆண்குறி
அளவு சுருங்கி விடும் வாய்ப்புண்டு.

ஓட்டையின் அளவளந்து ,
தட்டென்றோ ,
சல்லடையென்றோ ,
வளையமென்றோ
அழைக்கப்படலாம்.

-ஷ்ரவன்


மதிய மழை

கொட்டும் மழையில்
தேன் இருக்குது பாரடா

என் கண்கள்
இனிக்குது
சத்தியம் தானடா

இந்த மேகம்
இன்னும் தூரம்
போக வேணும் ,

அதிரவிடும் கச்சேரி
எனக்கும் மட்டும் இல்லை மானிடா 

கண்ணெல்லாம் சிரிக்க
நாமெல்லாம் களியாட்டம்
போட்டா போதுமடா

இயற்கை நன்றி சொல்லி போகுமடா ..

-ஷ்ரவன்

Tuesday, August 30, 2016

வேலியிட்ட இடுகாடு

என்னை அம்மணமாக்கி
முச்சந்தியில் நிறுத்திவிடும்
என்ற பயத்தில்

பல
சொற்களை  , வரிகளை  , கவிதைகளை
கல்லறை கூட நடாமல்
ஆழமாய் புதைத்துவிட்டு
பெருமூச்சுவிடுகிறேன்.

-ஷ்ரவன்

துணைவி

ஒருமை தெளியா மயக்கம் ..
எப்போதும் போல் தாங்கிட
தமிழ் மட்டும்.

-ஷ்ரவன்