Tuesday, February 9, 2016

கண் மதிப்பு , கையளவு

துளி அலகில்
கடல் அளப்பது போல ,
உன்னழகு வர்ணிக்கும்
என் கவிதை.

தொடுவானம் அளக்கும்
என் கண்கள் கொள்ளா
கையடக்க முடிவிலி நீ.

- ஷர்வன்

Thursday, February 4, 2016

தினக் காரணி

வழிவது
வியர்வையா ?? வெறுப்பா ??
தெரியவில்லை

சற்றியிருக்கும் மனிதர்கள் மேல் 
கோபமா ?? கொலை வெறியா ??
புரியவில்லை

முட்டாள்கள் மத்தியில்
வெறுப்பில் கருகிக் கொண்டிருக்கும்
காலை நேர
சாலை நெரிசலில்
என்னிலை மீட்டுத்தரும்
இதமான வானொலி பாடல் போல்

அலுவலகத்தில் அவள் முகம்

-ஷர்வன்

Thursday, January 28, 2016

வேண்டுதல்

கடந்து சென்ற காலமெல்லாம்
ஒரு நொடியாய் சுருங்கிவிட்டதடி.

நொடியாகிட துடிக்கும் ஏதிர்காலம்
என்முன்னே
முடியாமல் நீளுதடி.

நிகழ்காலம் மட்டும்
எங்கென்று தெரியாமல்
காணாமல் போகுதடி.

நிகழ்வுகளெல்லாம்
உணர்வுகளில் ஊறி ,
அறிவில் உலர்ந்து ,
ஞாபகங்களாய் தங்குதடி.

ஞாபகங்கள்
தினம் தினம் வண்ணம் வெளிறிப்போய்,
வெறும்
எண்ணங்களாய் எஞ்சுதடி.

காலச் சல்லடையில் ,
என் எண்ணத் தண்ணீர் தேக்கி
இருத்தி வைக்கும் முயற்சியில் ,
என் நெஞ்சம் பைத்தியம் ஆகுதடி ..

ஒரு பொழுதேனும்
நிகழ் குற்றுழியில்
என் சித்தம் நிறுத்திடவே
அருளாயோடி ...

-ஷர்வன்

Tuesday, January 5, 2016

சக்தி

இயல்பாய் கழிந்து கொண்டிருந்த
பழகிய பழைய நொடிகளுக்குள்
எப்படியோ புகுந்துவிட்ட அந்த புது விநாடி.

வழிந்தோடும் என் கண்ணீர் மட்டும் சாட்சியாய்
நானும் ஒரு முறை உரக்கக் கூறிவிட்டேன் .
எங்கெங்கு காணினும் சக்தியடா ......

-ஷர்வன்

Tuesday, August 4, 2015

காதல்

உன் நேர்மையின் வீரம் காண
செய்கையின் கண்ணியம் கண்டிட
நீ விரும்பும் பெண்ணாகிட ,
ஆசை மேவுதடி

நான் விரும்பும் ஆணாய் நீ ஆக வேண்டும்
என்ற ஆசையில்
புது உண்ர்வொன்று சிலிர்ப்பூட்டுதடி

நிலை சிவமும் , அது
நிறை சக்தியும் ,
என்ற பழங் கூற்றில்
உண்மை இல்லையடி ...

பிரபஞ்ச எல்லையில் ...
காலம் ஓய்வெடுக்கும் வேளையில்...
சக்தி தேய்ந்து சிவமாகி
சிவனின் சூன்ய இதயத்தில்
வெடித்துப் பெருகும் சக்தி  கோலத்தின்
நாடக வடிவமடி
நம் காதல் ..

--ஷர்வன்

Sunday, July 26, 2015

தொக்க நிலா


ஒளி பட்டுத் தெறித்தவிடத்திலெல்லாம்
 உன்னை இழந்த உன்னை ,
இரவில் ,ஒற்றைப் புள்ளியில் மனம் குவிக்கவிட்டு ,
உன்னை மீட்டெடுத்த நான்
உண்மையில்
நான்  உன் இணை கேள்..

மிகுகவர்ச்சி கோள்களென்ன ,
ஓயாமல் கண் சிமிட்டும் நட்ஷத்திரங்களென்ன ,
உன் ஈர்ப்பில் விடுபட முடியா கோலம் ,
நான் செந்தொடைக்  கோளம்.

உன் வழி சேர்ந்து விட்டேன் ..
உன்னியல்பு காத்திட ..
உன் வளி இனையா இணை
நான் உன் துணைக் கோள் ..

விண்வெளி மேடையில் ,
கவர்ச்சி நடனம்..
நேருமில்லா நிரையுமில்லா அசையும் பயணம் ..

--ஷர்வன்

Monday, November 3, 2014

முத்தம்

தினம் தினம்
ஒரு கவிதை படிக்கிறேன்..

எப்போதும் நீ எனக்குத் தருவது
இரு வரி விமர்சனமும்
ஊக்கப் பரிசாய் ஓர் புன்னகையும்..

என்றேனும்
உன் முத்தத்தை வென்றேதீரும்
என் கவிதை !!!
அன்றே எழுதிவிடுவதாய் உத்தேசம்
இலக்கணம் பிறழப்பிறழ
ஒரு கலிப்பாவை

பரிசாய் பெறப்போவது
இல்லை
பிடுங்கப்போவது
உன் வெட்கத்தை


--ஷர்வன்