Friday, September 9, 2016

அவ்வண்ணமே அமையட்டும் அம்மணம்

விரச எல்லை தாண்டிவிட்ட விரகம் ,
நாகரீக எல்லை தாண்டிவிட்ட அசிங்கமான கோபம் ...
....
....
....

உடைமட்டுமல்ல
ரசனையும் சுமைதான்,

சிகரத்தின் அடிவாரத்தில்
கழற்றிவிட்ட ரசனை
புள்ளியாய் தெரிகிறது.
உயிர் காக்க தேவையொன்றுமில்லை
உயிர் மட்டும் பிடித்துக்கொண்டு
உச்சி தொட்டுவிட தவழும்
மலையேறியின்
வெறிதான் எனக்கும்.

கொடுக்க காதலும் முத்தமும்
தீர்ந்தாயிற்று,
துரோகிக்கு தரும்
கற்பனைத் தண்டனைகள் மட்டுமே
மீதியிருக்கிறது.

சத்தமும் ரத்தமும்
போர் வண்ணமாய் ...

விசும்பல் சத்தம்
வெற்றியின் பாதையில்
போர் செல்லுவதை தெரிவிக்கிறது.

உன் விசும்பல் எனக்கும்
என் வெறி உனக்கும்
அவரவர் வெற்றிகள்.

வலுவின்மை தரும்
இயலாமை,
அம்மண நிலையிலும்
அவமானம்.

என் மானத்தை
கோட்டுமேட்டிலோ? காலிடிக்கிலோ?
புதைத்தாலோ 

கொஞ்சலில் ஆரம்பமாகி,
மண்டியிட்டு கெஞ்சும் என் சொல்லிலோ,

காக்கவிட்டு , தவிக்கவிட்டு
ஏறு கணத்தில் ,சீறு சினதிற்கு
பிச்சையாய் நீ தரும்
புன்னகை தருணத்திலோ

உன் பழிவெறி தீருமாயின்
அவ்வண்ணமே அமையட்டும் நம் அம்மணக் கோலம்.

-ஷ்ரவன்

பார்த்ததும் தெளிந்ததும்

முந்தானை நழுவாதிருக்க ஒரு ஊசி ,
இடுப்பு தெரியாதிருக்க ஒரு ஊசி ,
மறைக்க வேண்டுமானால்
உன் முகத்தையெல்லவா
மறைத்திருக்க வேண்டும்.

கூரில்லா முட்டாளா இவள்.

வெட்கத் தருணங்களில் 
முகம் மறைத்துக் கொள்ளும்போது
தெளிகிறது

எல்லாம் தெறிந்தேதான் செய்திருக்கிறாள்
சூச்சமக்காரி..

-ஷ்ரவன்

Wednesday, August 31, 2016

எச்சரிக்கை

ஒவ்வொரு வாசிப்பும்
ஒரு கண் திறந்து வைக்கிறது.

அந்தச் சல்லடைக்கண் ,
தீது நன்று பிரிப்பதற்காவதில்லை 
தேர்வன தேர்ந்தெடுக்க.

சில புத்தகங்கள்
கண் திறப்பதில்லை
பெரிய ஓட்டை போட்டுச் செல்கிறது.
அவற்றை அவ்வாறே
உள்வாங்கிட தன்மை செய்கிறது.

பக்கவிளைவு
சுயமிழத்தல்!!!!
அல்லது
சுயம் தங்கள் ஆண்குறி
அளவு சுருங்கி விடும் வாய்ப்புண்டு.

ஓட்டையின் அளவளந்து ,
தட்டென்றோ ,
சல்லடையென்றோ ,
வளையமென்றோ
அழைக்கப்படலாம்.

-ஷ்ரவன்


மதிய மழை

கொட்டும் மழையில்
தேன் இருக்குது பாரடா

என் கண்கள்
இனிக்குது
சத்தியம் தானடா

இந்த மேகம்
இன்னும் தூரம்
போக வேணும் ,

அதிரவிடும் கச்சேரி
எனக்கும் மட்டும் இல்லை மானிடா 

கண்ணெல்லாம் சிரிக்க
நாமெல்லாம் களியாட்டம்
போட்டா போதுமடா

இயற்கை நன்றி சொல்லி போகுமடா ..

-ஷ்ரவன்

Tuesday, August 30, 2016

வேலியிட்ட இடுகாடு

என்னை அம்மணமாக்கி
முச்சந்தியில் நிறுத்திவிடும்
என்ற பயத்தில்

பல
சொற்களை  , வரிகளை  , கவிதைகளை
கல்லறை கூட நடாமல்
ஆழமாய் புதைத்துவிட்டு
பெருமூச்சுவிடுகிறேன்.

-ஷ்ரவன்

துணைவி

ஒருமை தெளியா மயக்கம் ..
எப்போதும் போல் தாங்கிட
தமிழ் மட்டும்.

-ஷ்ரவன்

Monday, August 29, 2016

புதுக்கவிதை

பார்த்ததும் சப்பு கொட்டிட வைக்கும்
அளவாய் புளியை கரைத்து ,

கொதிக்கும் தண்ணீரில்
சிறு பொட்டளவு இருக்கும் பருப்புகளை
கையளவிட்டு,

வெண்பாவின் சீரளவில் ,
குறையாமல் வெட்டிய
இளசான ("இளசான" கிடைக்காவிட்டால் இத்துடன் நிறுத்தி கொள்ளவும் )
முருங்கை சேர்த்து ,

பருப்பு
உடையட்டுமா , குழையட்டுமா
என்று கேட்கும் போது ,

சப்புக்கொட்டியையும் ,

வேதியல் அறியா சில
மந்திரத்தூள்கள் (உப்பு உள்ளடக்கம் )
சேர்த்து ,

அளவெல்லாம் தேவதைகள் அறிந்தது ,
நமக்குத் தோரயமாய்
போதுமானது ,

வாசம் சொல்லிவிடும் சுவையை
நக்கிப் பார்ப்பது சந்தேகம் ,

காத்திருந்து வரும்
வாசம்
மூளை சென்று
திறந்து வைக்கும்
சொர்க வாசல் ,

வெளி வரும் ஆவி
யாரைப் பிடிக்கவென்று
முடிவெடுக்கும் முன் ,

அப்படியே பழைய சோற்றுக்குள் கொட்டி

அடடே ... ஆச்சர்ய குறி ...

-ஷ்ரவன்