Monday, August 29, 2016

புதுக்கவிதை

பார்த்ததும் சப்பு கொட்டிட வைக்கும்
அளவாய் புளியை கரைத்து ,

கொதிக்கும் தண்ணீரில்
சிறு பொட்டளவு இருக்கும் பருப்புகளை
கையளவிட்டு,

வெண்பாவின் சீரளவில் ,
குறையாமல் வெட்டிய
இளசான ("இளசான" கிடைக்காவிட்டால் இத்துடன் நிறுத்தி கொள்ளவும் )
முருங்கை சேர்த்து ,

பருப்பு
உடையட்டுமா , குழையட்டுமா
என்று கேட்கும் போது ,

சப்புக்கொட்டியையும் ,

வேதியல் அறியா சில
மந்திரத்தூள்கள் (உப்பு உள்ளடக்கம் )
சேர்த்து ,

அளவெல்லாம் தேவதைகள் அறிந்தது ,
நமக்குத் தோரயமாய்
போதுமானது ,

வாசம் சொல்லிவிடும் சுவையை
நக்கிப் பார்ப்பது சந்தேகம் ,

காத்திருந்து வரும்
வாசம்
மூளை சென்று
திறந்து வைக்கும்
சொர்க வாசல் ,

வெளி வரும் ஆவி
யாரைப் பிடிக்கவென்று
முடிவெடுக்கும் முன் ,

அப்படியே பழைய சோற்றுக்குள் கொட்டி

அடடே ... ஆச்சர்ய குறி ...

-ஷ்ரவன்


சுத்த்த்த்தம்

இன்று காலை இரு சக்கரம் ஏறிய உடனே ,
பாரதி நினைவில் தொற்றிக் கொண்டான் .

மாடனைக் காடனை வேடனைப் போற்றி
மயங்கும் மதியிலிகாள்..
எதனூடும்நின் றோங்கும் அறிவென்றே தெய்வமென்
றோதி யறியிரோ

"அறிவு கெட்ட நாயே .." திட்டியே விட்டேன்
அவசரமோ ..
அறிவீனமோ ..
அகங்காரமோ ..
குறுக்கே இன்று பாய்ந்ததற்கு பேர்
மகிழுந்து.

கவிதையை முடிக்காமல் இருக்க மனமில்லை ..
இப்போது அடுத்து வரி ஞாபகம் வரவில்லை ..
சிந்தனையும் வண்டியும்
ஒரு சேர பயணம் .

இந்த முறை
அறிவீனம் .. அகங்காரமெல்லாம் இல்லை
அதிர்ச்சி ..
குறுக்கே பாய்ந்தது குழந்தை .

யாரை திட்டலாமென்று ஏத்தனிக்கையில் ..
ஓடி வந்தவள்
"அறிவிருக்கா .. குழந்தை கண்ணுக்கு தெரியலா.."
தப்பு என்னுடையதுதான்
என்று நம்பும்படி இருந்தது அவள் கோபம் ..

பல சிந்தனைகளுக்கு நடுவில்
இன்னும் ஞாபகம் வரவில்லை
அடுத்த வரி.

அலுவலகம் வந்ததும் ..
"அவனவனுக்கு அறிவு வேணும் .. வர்ற நேரத்தை பாரு "

தலை குனிந்து செல்லும் பொது ஞாபகம்
வந்தேவிட்டது
"சுத்த அறிவே சிவமென்று கூறுஞ்
சுருதிகள் கேளீரோ.."

 -ஷ்ரவன்

Saturday, August 27, 2016

ஞானம்

அன்பிற்கும் அறிவு வேணுமடி தங்கமே தங்கம் ...

பூரணமாய் வளர்ந்துவிட்ட
அன்புக்கும் , அறிவிற்கும்
ஒரு பேர் சொல்லித்தான்
அழைப்பாரடி
தங்கமே தங்கம் ...

--ஷ்ரவன்

Saturday, July 16, 2016

யாதுமானவளே

கவிதைகளெல்லாம் அழகில்லையடி ,
அதற்கு
கருவாய்
உருவாய்
நீ அமைந்த  பின் தான்
உன்மத்தம் ஆகுதடி ...

உவமைகளெல்லாம் உண்ர்ச்சி பெறுவது இல்லை ,
தத்துவமெல்லாம் சிந்தை திறப்பதும் இல்லை,
அதன் உருபொருளாய்
நீ இல்லையெனில் ....

நானுணர்த்த ஒரே  ஞானம் நீயடி ,
நான்
படிக்கும்
படைக்கும்
கவிதைகளெல்லாம்
நீயேதானடி.

-ஷர்வன் 

Sunday, July 10, 2016

யாதுமானவளே

உமையவள் பாதம் பற்றிட
திண்ணம் கொண்டபின் ..

காலமென்ன ..
அதை முடிக்கும்
காலனென்ன

என் சமர் சிவனுடன்.

-ஷர்வன் 

Tuesday, April 26, 2016

பெரு நிலை

இரவின் மடியில்
தனிமைப் பாடல்
முடிந்தபின்

பகலும் மனிதர்களும்
நோயையும் பேயையும்
போல் பீடித்துக் கொள்கிறது

இரவை நோக்கிய
ஏக்கத்தில்
நகர்கிறது
ஒவ்வொரு பகலும் ...

முடிவிலா ஏகாந்த பெருநிலை
நோக்கிய
ஏக்கத்தில்
நகர்கிறது
ஒவ்வொரு இரவும் ...

-ஷர்வன் 

Tuesday, February 9, 2016

கண் மதிப்பு , கையளவு

துளி அலகில்
கடல் அளப்பது போல ,
உன்னழகு வர்ணிக்கும்
என் கவிதை.

தொடுவானம் அளக்கும்
என் கண்கள் கொள்ளா
கையடக்க முடிவிலி நீ.

- ஷர்வன்