Sunday, July 10, 2016

யாதுமானவளே

உமையவள் பாதம் பற்றிட
திண்ணம் கொண்டபின் ..

காலமென்ன ..
அதை முடிக்கும்
காலனென்ன

என் சமர் சிவனுடன்.

-ஷர்வன் 

Tuesday, April 26, 2016

பெரு நிலை

இரவின் மடியில்
தனிமைப் பாடல்
முடிந்தபின்

பகலும் மனிதர்களும்
நோயையும் பேயையும்
போல் பீடித்துக் கொள்கிறது

இரவை நோக்கிய
ஏக்கத்தில்
நகர்கிறது
ஒவ்வொரு பகலும் ...

முடிவிலா ஏகாந்த பெருநிலை
நோக்கிய
ஏக்கத்தில்
நகர்கிறது
ஒவ்வொரு இரவும் ...

-ஷர்வன் 

Tuesday, February 9, 2016

கண் மதிப்பு , கையளவு

துளி அலகில்
கடல் அளப்பது போல ,
உன்னழகு வர்ணிக்கும்
என் கவிதை.

தொடுவானம் அளக்கும்
என் கண்கள் கொள்ளா
கையடக்க முடிவிலி நீ.

- ஷர்வன்

Thursday, February 4, 2016

தினக் காரணி

வழிவது
வியர்வையா ?? வெறுப்பா ??
தெரியவில்லை

சற்றியிருக்கும் மனிதர்கள் மேல் 
கோபமா ?? கொலை வெறியா ??
புரியவில்லை

முட்டாள்கள் மத்தியில்
வெறுப்பில் கருகிக் கொண்டிருக்கும்
காலை நேர
சாலை நெரிசலில்
என்னிலை மீட்டுத்தரும்
இதமான வானொலி பாடல் போல்

அலுவலகத்தில் அவள் முகம்

-ஷர்வன்

Thursday, January 28, 2016

வேண்டுதல்

கடந்து சென்ற காலமெல்லாம்
ஒரு நொடியாய் சுருங்கிவிட்டதடி.

நொடியாகிட துடிக்கும் ஏதிர்காலம்
என்முன்னே
முடியாமல் நீளுதடி.

நிகழ்காலம் மட்டும்
எங்கென்று தெரியாமல்
காணாமல் போகுதடி.

நிகழ்வுகளெல்லாம்
உணர்வுகளில் ஊறி ,
அறிவில் உலர்ந்து ,
ஞாபகங்களாய் தங்குதடி.

ஞாபகங்கள்
தினம் தினம் வண்ணம் வெளிறிப்போய்,
வெறும்
எண்ணங்களாய் எஞ்சுதடி.

காலச் சல்லடையில் ,
என் எண்ணத் தண்ணீர் தேக்கி
இருத்தி வைக்கும் முயற்சியில் ,
என் நெஞ்சம் பைத்தியம் ஆகுதடி ..

ஒரு பொழுதேனும்
நிகழ் குற்றுழியில்
என் சித்தம் நிறுத்திடவே
அருளாயோடி ...

-ஷர்வன்

Tuesday, January 5, 2016

சக்தி

இயல்பாய் கழிந்து கொண்டிருந்த
பழகிய பழைய நொடிகளுக்குள்
எப்படியோ புகுந்துவிட்ட அந்த புது விநாடி.

வழிந்தோடும் என் கண்ணீர் மட்டும் சாட்சியாய்
நானும் ஒரு முறை உரக்கக் கூறிவிட்டேன் .
எங்கெங்கு காணினும் சக்தியடா ......

-ஷர்வன்

Tuesday, August 4, 2015

காதல்

உன் நேர்மையின் வீரம் காண
செய்கையின் கண்ணியம் கண்டிட
நீ விரும்பும் பெண்ணாகிட ,
ஆசை மேவுதடி

நான் விரும்பும் ஆணாய் நீ ஆக வேண்டும்
என்ற ஆசையில்
புது உண்ர்வொன்று சிலிர்ப்பூட்டுதடி

நிலை சிவமும் , அது
நிறை சக்தியும் ,
என்ற பழங் கூற்றில்
உண்மை இல்லையடி ...

பிரபஞ்ச எல்லையில் ...
காலம் ஓய்வெடுக்கும் வேளையில்...
சக்தி தேய்ந்து சிவமாகி
சிவனின் சூன்ய இதயத்தில்
வெடித்துப் பெருகும் சக்தி  கோலத்தின்
நாடக வடிவமடி
நம் காதல் ..

--ஷர்வன்